Monday, January 6, 2020

ஸ்ரீ மனோன்மணி சமேத மஹாதேவர் ஆலயம்

இருப்பிடம் : திருவள்ளூர் மாவட்டம், அகரம் (புதுமைவிலங்கை) 

பிறவிகளில் மிக உயர்வாக கருதப்படுவது மனிதப் பிறவி ஆகும். பிறவியின் பெரும்பயனே இறைவனை உணர்வதற்கும் இனி ஒரு பிறவி இல்லாமல் இருப்பதற்குமேயாகும். அத்தகைய இறை  உணர்வை அடைய ஆலயங்கள் அவசியம். எனவே கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என நம் முன்னோர் கூறினர்.

இறைவனே பஞ்ச பூதங்களாக  விளங்குகின்றார். அதனால் தான் நாம் வணங்கும் இறைவனை கல்லிலே வடிக்கப்படுகிறது. மனிதன் வடிக்கும் சிலையில் இறைவன் அருள் பாலிக்கின்றார். பறவை மற்றும் விலங்குகளால் ஆலயம் அமைத்து வழிபட இயலாது. அனால் மனிதன் தன்னுள் உறைந்து இருக்கும் இறைவனை உணர ஆலயம் அமைத்து வழிபட முடியும். எங்கு ஆலயங்கள் இல்லையோ அங்கு அமைதி இல்லாமல் நெறி தவறி செல்கிறான். மனிதன் மனிதனாக வாழ ஆலயங்கள் அவசியம்.

கும்பாபிஷேகம் என்பதை பெருஞ்சாந்தி கூறுவர். ஆன்மாக்கள் உடலாலும், உள்ளத்தாலும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறினை போக்குமாதலால் மகா கும்பாபிஷேகம் என்றும் கூறுவர். புனராவர்தனம் என்பது கருவறை, விமானம், கோபுரம், பலிபீடம் ஆகியவற்றில் பழுது பார்த்து யாகசாலையில் முறைப்படி பூஜைகள் செய்து மூல விக்கிரத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்யப்படுவது புனராவர்தனம் எனும் பெருஞ்சாந்தி எனப்படும். 

ஒரு ஆலயத்தில்  மூன்றாண்டுகள் வரை பூஜை விடுபடுமாயின், ஈஸ்வரன் தனது மூல உருவிலிருந்து விலகி கோவில்  விமானத்திலிருந்து யாவருக்கும் அருள் பாலிப்பார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் கோவிலின் ஸ்தல விருஷத்திலிருந்து அருள் பாலிப்பார்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு கோவிலில் பூஜை நின்று போனால் சூரிய மண்டலத்தில் இருந்து அருள் புரிவார். பன்னிரண்டு ஆண்டுகள் பூஜை இல்லாமல் இருந்தால் அங்கு இறைவனின் சாஹித்யம் அகன்று பூதங்களும் அசுரர்களும் குடியேறிவிடுவார்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன. மேலும் சிவாலய திருப்பணி என்பது அஸ்வ மேத யாகம் செய்ததற்கு இணையாக புராணங்கள் கூறுகின்றன. எனவே பெறுதற்கரிய பலனான அஸ்வமேத யாக பலனை பெற சிவாலய திருப்பணியில் நாம் ஒவொருவரும் பங்கு பெற வேண்டும். இவ்வுலகை படைத்த இறைவனுக்கு ஆலயங்கள் தேவை இல்லை, அனால் மனித ஆன்மாக்கள் உயர்நிலையை அடைய, இறை உணர்வு வளர ஆலயங்கள் அவசியம்.

இந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அகரம்(கடம்பத்தூர் அருகில்) என்ற கிராமத்தில் உள்ள மிகப்பழமையான சிவாலயத்தை புதுப்பிக்கும் பணியை இறைவன் நமக்கு அளித்துள்ளார். இக்கோவிலை பற்றி அறிய நீங்கள் இக்கோவிலுக்கு ஒரு முறை வந்திருந்து ஸ்ரீ மஹாதேவர் அருளை பெற வேண்டுகிறேன்.


சிவபெருமான் பஞ்ச பூதங்களின் தலைவன். அதனால் தான், நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் பஞ்ச பூத க்ஷேத்திரங்களை அமைத்துள்ளனர். சிவனுக்குள் எல்லாம் அடங்கும் என்பதால் தான் படைத்தல், காத்தல், அருளுதல், மறைத்தல், அழித்தல் ஆகிய ஐந்தொழிலும் ஐந்து முகங்களில் செய்வதாக கூறுகின்றனர். எனவே தான் யாக சாலையிலும் சிவனுக்கு பஞ்ச அக்னி யாக குண்டமும், பஞ்சாசன மேடையும் அமைத்து சிவபெருமானை வழிபடுகின்றோம். எனவே ஐந்து எழுத்து மந்திரமாகிய நமசிவாயமும் நம்மை நாள் வழியில் காத்து இறைவனுடன் இரண்டற கலக்க செய்கிறது.

சிவனின் கிழக்கு நோக்கிய முகம் - தத்புருஷம் 
மேற்கு நோக்கிய முகம் - சத்யோஜாதம் 
வடக்கு நோக்கிய முகம் - வாமதேவம் 
தெற்கு நோக்கிய முகம் - அகோரம் 
கிழக்கு நோக்கிய உச்சியில் அமைந்துள்ள முகம் - ஈசானம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அகத்தியர் பூஜித்து பணித்ததின் பெயரில் அஷ்ட மா சித்திகள் தியானித்து வழிபட்ட லிங்கங்கள் 8 உள்ளன. இந்த லிங்கங்களை வழிபட்டால் அஷ்ட மா செய்திகள் கிட்டும் என்று நம்பப் படுகின்றது. இந்த  தகவல் தொன்மையான நூல்களிலிருந்து கிடைக்கப்பெற்றது/ அவை முறையே,

1. அனிமா - ஒருவரின் உடல் அளவைக் குறைத்துக்கொள்ளும் திறன் - வெண்மணம் புதூர் - ஸ்ரீ அகத்தீஸ்வரர்
2. மஹிமா  - ஒருவரின் உடல் அளவை பெருக்கி கொள்ளும் திறன் - புதுமைவிலங்கை - ஸ்ரீ அகத்தீஸ்வரர்
3. லஹிமா - ஒருவரின் எடையயை குறைத்துக்கொள்ளும் திறன் - அகரம் ஸ்ரீ அகத்தீஸ்வரர்(மஹாதேவர்) 
4. கரிமா - ஒருவரின் எடையினை அபரிவிதமான அளவுக்கு பெருக்கி கொள்ளுதல் - சத்தரை - ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
5. பிராப்தி - எதையும் சாதித்து பெரும்  திறன் - செஞ்சிபானம்பாக்கம் - ஸ்ரீ சோளீஸ்வரர்
6. வாசித்துவம் - எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுதல் - செஞ்சிபானம்பாக்கம் - ஸ்ரீ கைலாசநாதர்
7.  பிரகாம்யம் - வேண்டுவன யாவும் சிட்தி ஆக்கிக் கொள்ளுதல் - சிற்றம்பாக்கம் - ஸ்ரீ இஷ்ட சித்தி லிங்கேஸ்வரர்
8. ஈசத்துவம் - படைப்புத் தொழிலின் கண் ஆதிக்கம் - பேரம்பாக்கம் - ஸ்ரீ அஷ்ட சித்தி லிங்கேஸ்வரர்
9. அனைத்து அஷ்ட ம செய்திகள் வழிபட்ட தலம் - மணவூர் - கற்கடேஸ்வரர் 


அகரம் கிராமத்தில் இறைவன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இத்தலத்து இறைவன் ஸ்ரீமஹாதேவன் என அழைக்கப்படுகின்றார். வட்ட வடிவ ஆவுடையாருடன் இந்த சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதியில் சிவபெருமான் அருள்கிறார். சிவனின் பதினோரு ருத்ரர்களில் இரண்டாவதாக இடம் பெறுவது மஹாதேவர் என்ற திருநாமம் ஆகும்.

இத்தலத்தில் அம்பாளின் பெயர் ஸ்ரீமனோன்மணி ஆகும். தெற்கு நோக்கிய சன்னதியில் அம்பாள் அருள்புரிகிறாள். இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கிய சன்னதியில் அமைக்கப்பட்டு இருப்பதை அகத்திசுவரங்கள் என்று அழைக்கின்றனர். ஆவுடையாரை மனோன்மணி சக்தியாக கருதப்படுகிறது.

அம்பாள் அபய வரத முத்திரையுடனும், மேல் இருகரங்களில் பாசம், அங்குசம் ஏந்தி பக்தர்களின் துயரை துடைப்பவளாக விளங்குகின்றாள். மனோன்மணி என்ற சொல்லுக்கு லக்ஷ்மியின் திருநாமமாக கருதப்படுகிறது.

கோஷ்டங்களில்
தென் கிழக்கில் - விநாயகர்
தென் திசையில் - தட்சிணாமூர்த்தி
மேற்கு நோக்கி திசையில் - லிங்கோத்பவர்
வடமேற்கில் - பிரம்மனும்
வடகிழக்கில் - துர்கையும் அமைக்கப்பட்டுள்ளது
ஸ்தல விருஷம் - வில்வம்

கோஷ்ட தெய்வங்கள்
1. பிரம்ம தேவர் : சிவாலங்களில் அனைத்திலும் கோஷ்ட தெய்வமாக பிரம்மதேவனுக்குரிய இடம் உண்டு. வடக்கு நோக்கிய மாடத்தில் வடக்கு திசையை நோக்கியவாறு நான்முகங்களும் நான்கு கரங்கள் கொண்டவராக விளங்குகின்றார். மேற்கரங்களில் அட்சமாலை, கெண்டியை ஏந்தியவராக காணப்படுகிறார். பிரம்மன் தனது நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களை ஓயாது ஓதிக் கொண்டே இருப்பவர். தேவ வேள்விகளை செய்யும் நிபுணன், இதனால் தேவப் புரோகிதர் என்று அழைக்கப்படும் பிரம்மன்  இக்கோவிலில் கோஷ்ட தெய்வமாக அலங்கரிக்கிறார்.

2. தக்ஷிணாமூர்த்தி - இக்கோவிலின் தென் மேற்கில் தென்திசை தலைவனாக கருதப்படும் தக்ஷிணாமூர்த்தியின் திருஉருவச் சிலை
அமைக்கப்பட்டுள்ளது. தட்சிண் என்பது தென் திசையை குறிப்பதாகும். இவர் ஆலமரத்தடியில் வீற்றிருந்து போதித்து கொண்டிருக்கிறார். எனவே ஆலமர் செல்வன், ஆலமர் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இறைவனே பஞ்சபூதங்களாகின்றான் என்பதற்கு உதாரணமாக தக்ஷிணாமூர்த்தி உருவத்தை ஆன்றோர் கூறுவர். அவர் அமர்ந்துள்ள மலை மண்ணையும், கமண்டலம் நீரையும், கையிலுள்ள கனல் நெருப்பையும், பாம்பு வாயுவையும், விண்ணோக்கிய ஆலமரம் வானையும் குறிக்கின்றன. பதஞ்சலி முனிவருக்கு இவர் யோகத்தை அருளினார். தக்ஷிணாமூர்த்தி தனது காலை முயலகன் என்ற பூதத்தின் மீது ஊன்றியுள்ளார். அவன் தலையை மேற்கில் வைத்து கால்களை கிழக்கில் நீட்டி கவிழ்ந்திருப்பான். இவன் அறியாமையின் உருவமானவன் உயிர்களிடத்தில் உள்ள அறியாமையை விலக்கி கல்வி கற்க அனுபவ தெளிவு ஏற்படுகிறது. அறியாமை என்னும் மன இருளை அகற்ற தென்திசை தலைவர் நமக்கு அருள்புரிகிறார்.

3. விஷ்ணு துர்கை : துர்க்கம் என்பதற்கு கோட்டை என்று பொருள். உயிர்களை சூழ்ந்து நின்று கோட்டை போல் காப்பதால் அவள் துர்கா என்று அழைக்கப்படுகிறாள். சிவபெருமானின் சக்தி, விஷ்ணுவின் அம்சத்துடன் கலந்து தோன்றியதால், துர்கை இரண்டு பேரின் குணங்களையும் பெற்றவளாக விளங்குகின்றாள்.

4. நந்தி என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி என்று பொருள் எப்பொழுதும் சிவனின் தியானத்திலே நந்தி பகவான் இருப்பதால், நந்தி பகவானை தொப்புள்கொடி பந்தம் என்று கூறுவர். இதனாலேயே நந்தி பகவானை பிரதிஷ்டை செய்யும் போது நந்தி பகவானை இறைவனின் நாபிக்கமல உயரத்தில் இருக்கும் வண்ணம் அமைப்பர். ப்ரதோஷ வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவ பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறுவர். ப்ரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடத்தப்படும். இந்த ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறிய மண்டபம் அமைக்கப்பட உள்ளது.

5. கால பைரவர் : திருத்தங்களை பாதுகாக்கும் காவலராக கால பைரவர் கருதப்படுகிறார். இவரே காவல் புரிபவர். இவர் nக்ஷத்ர பாலகர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்ற சொல்லுக்கு எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவரை காப்பதால் பைரவர் என்றழைக்கப்படுகிறார். நாயை வாகனமாக கொண்டவர் ஆலயத்தின் பாதுகாவலராக இவர் கருதப்படுவதால் ஆலயங்களில் பூஜைகள் முடிந்த பின்பு சாவியை
இவர் சன்னதியில் வைத்து எடுத்து செல்வது வழக்கம். ஆலயங்களில் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கி (அ) தென் திசையை நோக்கி இவர் சன்னதியை அமைப்பது மரபாகும். பைரவாஷ்டமியில் இவருக்கு அபிஷேகம் செய்து சத்ருக்களை ஜெயிக்கவும், நல்வாழ்வு பெறவும் இவர் உதவுகிறார்.

சிதலமடைந்திருந்த  இக்கோயில்  திருப்பணி செய்ய உத்தேசித்து திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இக்கோயில் நடைபெற உள்ள பணிகளின் விவரம்

1. அம்மன் சன்னதி, சிவன் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், தரை சரி செய்யும பணி.
2. பிள்ளையார் மற்றும் வ,ள்ளி தெய்வாணையுடன் கூடிய முருகருக்கு தனி சன்னதி.
3. கால பைரவருக்கு தனி சன்னதி
4. சண்டிகேஸ்வரருக்கு தனி சன்னதி
5. நால்வருக்கு சிறிய மண்டபம்
6. சிறிய நந்தி மண்டபம் கட்டப்பட திட்டமிட்டு திருப்பணி வேலை நடைபெற்று வருகிறது.

இந்த கோயிலை சுற்றி உள்ள எண் திசையிலும் உள்ள சிவாலயங்கள்.
1. கிழக்கு : பிஞ்சிவாக்கம்
2. மேற்கு : செஞ்சி
3. வடக்கே : திருப்பாச்சூர் - பாடல் பெற்ற ஸ்தலம்
4. தெற்கே : புதுமாவிலங்கை
5. வடகிழக்கு : கடம்பத்தூர்
6. வடமேற்கு : மணவூர்
7. தென்கிழக்கு : மப்பேடு
8. தென்மேற்கு : கூவம் - பாடல்பெற்ற ஸ்தலம்

இந்த ஊரின் தெற்கே குசஸ்தலை ஆறு ஓடுகிறது.

இக்கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 30-ம் தேதி (30.01.2020) நடைபெற உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீபட்டம் ஹாலாஸ்ய நாத சிவாச்சாரியார், அண்ணாமலை தேவஸ்தானம் அவர்கள் தலைமையில் சுமார் 18 சிவாச்சாரியர்களுடன் நடைபெற உள்ளது. சிவனுக்கு பஞ்சாக்னி மற்றும் பிற தெய்வங்களுக்கு ஏகாக்னியும், மொத்தம் 9 ஹோம குண்டங்களுடன் 4 காலயாக சாலை பூஜையுடன் நடைபெற உள்ளது.


இக்கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கு பொருளுதவி நிதியுதவி தேவைப்படுகிறது. இறைவனை உணர இறைப்பணி அவசியம். அந்த இறைப் பணியை செய்ய ஆலயங்கள் கட்டாயம் அவசியம். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த காஞ்சி மஹாப்பெரியவர் அவர்கள் புதிய ஆலயத்தினை அமைப்பதைவிட பழைய கோவில்களை புனருத்தாரணம் செய்வது மிகவும் உசிதமாகும் என்று கூறியிள்ளார். எனவே இறைப்பணியில் விருப்பம் உள்ள அனைவரும் இந்த சிவாலயத் திருப்பணியில் அவசியம் பங்கு கொண்டு இறைஅருள் பெற வேண்டுகிறோம்.




தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
S. வரதராஜன்,
97, கச்சேரி ரோடு,
கு3, க்ரீன்விச் லஸ்சஸ் அபார்ட்மெண்ட்,
மயிலாப்பூர், சென்னை-600 004
தொடர்புக்கு - 24611244, 94449 17124
மின் அஞ்சல் - ucovardu@yahoo.com / sivalayamandram@gmail.com



No comments:

Post a Comment

Thank you for your message. We will review your comment and/or feedback and come back to you.